நெசவுத்தொழில்

ஒண்ணுபுரம் என்றால் எங்கள் மாவட்ட மக்களுக்கும் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளுக்கும் நினைவிற்கு வருவது கைத்தறி பட்டு சேலை. பட்டு என்றால் தமிழ் நாட்டில் நினைவிற்கு வருவது காஞ்சிபுரம். இந்த காஞ்சிபுரத்திற்கே அதிக அளவில் பட்டு சேலைகளை ஏற்றுமதி செய்வது ஒண்ணுபுரம் என்றால் அது மிகையாகாது. என் ஒண்ணுபுரம் கிராமத்தில் இருக்கும் ஓவ்வோர் வீட்டிலும் குறைந்தபட்சம் ஒரு நெசவாளராவது இருப்பர். ஆரணியை சுற்றியுள்ள பகுதிகளில் பட்டு நெசவு செய்யப்பட்டாலும் ஒண்ணுபுரம், துருகம் மற்றும் தேவாங்கபுரம் ஆகிய மூன்று கிராமங்களின் அளவுக்கு செய்வதில்லை.

ஏனெனில் எங்கள் ஒண்ணுபுரம், துருகம், தேவாங்கபுரம் ஆகிய மூன்று கிராமங்களில் வசிப்பவர்கள் தெலுங்கு தேவாங்க சமூகத்தை சேர்ந்தவர்கள். எங்களின் குலத்தொழிலே நெசவுத்தொழிலாகும். இந்த நவீன உலகில் பல இன்னல்களை எங்கள் தொழில் சந்தித்து வந்தாலும் இன்னும் எங்கள் கிராம மக்கள் கைத்தறி நெசவையே நம்பியுள்ளனர். என் கிராமத்தில் தோராயமாக 800 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகிறோம்.   இத்தொழில் மூலம் அதிக வருவாய் ஈட்டினாலும் இத்தொழில் சந்தித்து வரும் பிரச்சனைகளால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை நெசவுத்தொழிலில் அமர்த்த தயங்குகின்றனர். ஏனெனில் எங்கள் தொழிலானது கைத்தறி அல்லாத பிற பட்டு சேலைகளால் பெரும் சவாலைச் சந்தித்து வருகிறது. ஆயினும் கைத்தறி பட்டிற்கு இருக்கும் மவுசு இன்னும் குறையாமல் தான் இருக்கிறது.

என் கிராமத்திற்கு தற்பொழுது வெளி மாநிலங்களில் இருந்தும் வாடிக்கையாளர்கள் வந்து சேலைகளை வாங்கிச் செல்லும் அளவுக்கு சிறப்பு பெற்றுவிட்டது. அதுமட்டுமின்றி இக்கிராமத்தில் உள்ள பட்டு சேலை உற்பத்தியாளர்கள் மற்ற மாவட்டங்களில் உள்ளவர்களுக்கு தொழில் கற்றுக் கொடுத்தும், அவர்களுக்கு தேவையான நெசவுப்பொருட்களை அளித்தும் அங்கும் தொழில் வளர்த்து வருகின்றனர். அதுமட்டுமின்றி எங்கள் ஊரில் நெய்யப்படும் சேலைகள் தற்பொழுது நேரடியாக பெரிய பெரிய பட்டு சேலை விற்பனையாளர்களுக்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இத்தகைய காரணங்களால் எங்கள் கைத்தறி நெசவுத்தொழிலானது அழியாத் தொழிலாக மாறி வருகிறது. தற்பொழுது எங்கள் ஊரின் இளைய சமுதாயமும் படித்துவிட்டு குறைந்த வருமானத்தில் பிடிக்காத வேலைகளை செய்பவர்கள் நெசவுத்தொழிலை நாடி எங்கள் கிராமத்திற்கு திரும்பிக் கொண்டும் இருக்கின்றனர். ஒரு பத்து பதினைந்து வருடங்களுக்கு முன் மாடி வீடுகள் விரல் விட்டு எண்ணும் அளவிற்கு மட்டுமே இருந்தது. ஆனால் தற்பொழுது ஓட்டு வீடுகளை என் கிராமத்தில் பார்ப்பதே அரிதாகிவிட்டது. இதற்கு காரணமும் நாங்கள் கைத்தறி நெசவில் ஈட்டும் வருமானமேயாகும்.