திருமண முறை

பாரம்பரியத்தையும், கலாச்சாரங்களையும் பேணிக்காப்பதில் தலை சிறந்து விளங்கும் என் கிராமம் திருமணங்களையும் பாரம்பரிய முறைப்படி நடத்தி வருகிறது. இது என் கிராமத்தில் இரு வீட்டார் பற்றியது மட்டும் அல்ல. இது ஒரு கிராமத்தின் அனைத்து மக்களையும் உள்ளடக்கியதாகும். மணமகனுக்கும் மணப்பெண்ணிற்கும் ஊரில் உள்ள அனைவரும் எதாவது ஒரு வகையில் சொந்தமாக இருப்பார். ஏனெனில் இது வரை என் ஊரில் பெரியோர்களின் நிச்சயபடிதான் என் சமூகத்தில் உள்ள அனைவருக்கும் கல்யாணம் நடந்துள்ளது. எங்கள் ஊரில் பெண் எடுப்பதும் மற்றும் பெண் கொடுப்பதும் இரண்டுமே என் தேவாங்க சமூகத்திற்கு உள்ளேயே தான். அதுவும் எங்கள் ஊர் பெரியவர்கள் மூலமாகவே நிச்சயிக்கப்பட்டு நடக்கும். முதலில் மணமகன் வீட்டிலிருந்து ஊர் பெரியவர் ஒருவர் தூது அனுப்பப்படுவர்.பிறகு பெண் வீட்டில் சம்மதம் என்றால் அந்த பெரியவர் மூலம் மணமகன் வீட்டிற்கு தகவல் தெரிவிக்கப்படும். பிறகு கல்யாணம் நடத்தி வைக்க தாம் சார்ந்த கட்சியின் தலைமை செட்டிகளுக்கு இரு வீட்டாரும் தெரிவிப்பர். பிறகு ஒரு நல்ல நாள் பார்த்து முதலில் மணமகன் வீட்டார் சொந்தங்களுடனும் கட்சியின் தலைமை செட்டியுடனும் ஊர் அறிய பெண் வீட்டிற்கு செல்வர். அங்கு பெண் வீட்டில் அவர்கள் சார்ந்த கட்சியின் தலைமை செட்டியுடன் இருப்பர். இங்கு மணமகன் வீட்டிலிருந்து வருபவர்களுக்கு மணமகள் வீட்டின் ஆண்களும் பெண்களும் சிறப்பான வரவேற்பு அளிப்பர். பிறகு இரண்டு தலைமை செட்டிகளும் இரு வீட்டாரின் சம்மதத்தை ஊரறிய கேட்பர். பிறகு இரு வீட்டின் பெற்றோரும் மற்றும் மணமகளும் ஊரறிய சம்மதம் தெரிவித்த பின் இனிப்புகளும் தாம்பூலங்களும் வழங்கப்படும். பிறகு பெண் வீட்டார் விருந்தும் வழங்கப்படும்.
பிறகு அதே நாளிலோ இல்லை மற்றுமொரு நல்ல நாளிலோ திருமண அழைப்பிதழ் எழுதப்படும். இந்த நிகழ்வில் பெண் வீட்டார் தாம் சார்ந்த கட்சியின் தலைமை செட்டியுடன் மணமகன் வீட்டிற்கு செல்வர். அங்கு அவர்களுக்கு மணமகன் வீட்டார் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு அமரவைக்கப்படுவர். அங்கு மணமகன் சார்ந்த கட்சியின் தலைமை செட்டி தலைமை வகித்து இருவீட்டாரின் தகவல்களை கேட்டறிந்து ஓர் ஆன்மீகவாதியால் திருமண அழைப்பிதழ் எழுதப்படும். பிறகு மணமகன் வீட்டார் மணமகள் வீட்டாருக்கு இனிப்புகளையும் தாம்பூலங்களையும் அளிப்பர். பிறகு மணமகன் வீட்டார் மணமகள் வீட்டாருக்கு விருந்தளித்து உபசரித்து வழியனுப்புவர். அதே நாளில் சிலர் நிச்சயதார்தத்தையும் வைத்துக்கொள்வார். ஆனால் பல திருமணங்களில் நிச்சயதார்த்தம் கல்யாணத்திற்கு முந்தைய நாளில் வைத்துக்கொள்வார். பிறகு கல்யாணத்திற்கு இடைப்பட்ட நாட்களில் இரு வீட்டாரும் இணைந்து திருமண அழைப்பிதழை ஊரில் உள்ள அனைவருக்கும் வைப்பார் மற்றும் மணமகன் தன் நண்பர்களை அழைத்துக்கொண்டு தன் நண்பர்களுக்கும் நன்கு பழகியவர்களுக்கும் நண்பர்கள் திருமண அழைப்பிதழை வைப்பர். பிறகு திருமண நாள் நெருங்கும் தருவாயில் ஒரு நல்ல நாள் பார்த்து பந்தக்கால் மணமகன் வீட்டில் நடப்படும். அதற்கு முன்பு மணமகன் வீட்டை சேர்ந்த கட்சியின் தலைமை செட்டி இரு வீட்டாரையும் அழைத்து கலந்தாலோசித்து துரைமார்களை நியமிப்பார். இவர்கள் மிக முக்கியமானவர்கள் இவர்கள் திருமணத்திற்கான அனைத்து வேலைகளையும் எடுத்து செய்வர். இவர்கள் தலைமை செட்டியின் சொல்லிற்கு கட்டுப்பட்டு நடப்பர். இவர்கள் பந்தக்கால் நடுவதில் இருந்து கல்யாணம் முடிந்து மணமகன் வீட்டு விருந்தோம்பல் முடியும் வரை அனைத்து வேலைகளையும் கட்சிதமாக செய்வர். பெண் வீட்டாரும் தமக்கு தேவைப்பட்டால் தாம் சார்ந்த கட்சியின் தலைமை செட்டியை அணுகி துரைமார்களை நியமித்துக்கொள்வர். எங்கள் ஊரில் கல்யாணத்திற்கு முன்னும் பின்னும் மூன்று முதல் ஐந்து நாட்களுக்கு தத்தம் சொந்தங்களுக்கு விருந்தோம்பல் சிறப்பாக நடைபெறும். என் ஊரில் ஒவ்வொரு திருமணமும் ஊரில் மக்களின் ஒற்றுமையையும், பந்தத்தையும் மென்மேலும் பெருக்கி சிறப்பாக நடந்தேறும். மேலும் எனது ஊரின் திருமணம் மற்ற ஊர்களை காட்டிலும் சற்று வித்தியாசமானது. ஏனெனில் மணமகன் வீட்டார் மணமகள் வீட்டாரிடம் வரதட்சணை என்று ஒரு பைசாவும் கேட்கமாட்டார்கள். எங்கள் ஊரைப் பற்றி குமுதம் வாராந்திர புத்தகத்திலும் 'வரதட்சணை வாங்காத அதிசய கிராமம்' என்ற முகப்புத் தலைப்பில் மூன்று பக்க கட்டுரையும் வந்துள்ளது. வேண்டுமானால் பெண் வீட்டாரின் செலவையும் மணமகன் வீட்டாரே ஏற்ப்பரே தவிர வரதட்சணை கேட்கமாட்டர்.

Regan McCook

Founder & CEO

Eric Teagan

Vice President

Timothy Barrett

CFO