ஒண்ணுபுரம்

கலைகளையும், கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் வளர்ப்பதிலும் மற்றும் பேணிக்காப்பதிலும் கிராமங்களே முக்கிய பங்காற்றுகின்றன.ஆனால் இன்றோ நவீன உலகின் வளர்ச்சியால் நம் முன்னோர் வளர்த்த கலைகளும், பாரம்பரியமாக பின்பற்றிய கலாச்சாரங்களும் இன்று சிதைவுற்றுவருகின்றன.ஆனால் இதற்கும் ஒரு சில கிராமங்கள் விதிவிலக்காகின்றன. அந்த வகையில் எங்கள் அழகிய ஒண்ணுபுரம் எனும் மஹாராஜாப்பேட்டையும் இதில் அடங்கும். ஆம்...எங்கள் கிராமம் இன்றளவிலும் கலைகளையும், கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் வளர்த்தும் மற்றும் பேணிக்காத்தும் மற்ற கிராமங்களுக்கு முன்னோடியாக திகழ்ந்து வருகிறது.

எங்கே இருக்கிறது? எவ்வாறு இருக்கிறது?

என் கிராமமானது திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி வட்டத்தில் ஆரணியில் இருந்து 17 கிமீ தொலைவிலும், வேலூரில் இருந்து 28 கிமீ தொலைவிலும் நாகநதிக்கரையில் அமைந்துள்ளது.தோராயமாக 800 குடும்பங்களும் 3200 பேரும் வசிக்கின்றனர்(2011 கணக்கெடுப்பின்படி). என் கிராமத்தில் தெலுங்கு மொழியும், தமிழ் மொழியும் பேசப்படும்.என் கிராமம் இயற்கை எழில் சூழ்ந்தும், மலைகள் சூழ்ந்தும் அமையப்பெற்றுள்ளது. என் கிராமமானது ஓங்கி உயர்ந்த தனித்தனி வீடுகளுடனும், நெசவின் ஓசையுடனும், அழகிய தெருக்களுடனும் மற்றும் ஒவ்வொரு தெருக்களுக்கும் நன்கு கட்டப்பட்ட கோவில்களுடனும் அமையப்பெற்றுள்ளது.

எங்கள் ஊரில் இருந்து வேலூர் மற்றும் ஆரணி நகரங்களுக்கு செல்ல பேருந்து வசதிகளும் உள்ளது. ஆன்மிகத்தில் சிறந்து விளங்கும் என் கிராமம் அத்துடன் காலங்காலமாக பின்பற்றப்பட்டுவரும் கலைகளையும் பேணிப் பாதுகாத்து வருகிறது. பட்டு சேலைகளுக்கு பெயர் பெற்ற என் கிராமம் வெள்ளை வேட்டிகளுக்கும் பிரசித்தி பெற்றது. என் கிராமத்தில் உள்ள இளைஞர்கள் முதற்கொண்டு பெரியவர்கள் வரை அனைவரும் வெள்ளை வேட்டியை அணிவோம். ஆதலால் எங்களுக்கு எங்கு சென்றாலும் சிறப்பு மற்றும் சிறப்பான வரவேற்பு அளிப்பர். எங்களை சுற்றியுள்ள கிராமங்களிலும் சரி நகரங்களிலும் சரி எங்களை எளிமையாக அடையாளம் கண்டுவிடுவர் மற்றும் எங்களை பெருமையாகவும் பேசுவர். அதுமட்டுமின்றி இந்து மதமானது பிற மதங்களின் வளர்ச்சியால் அழிந்து வரும் இக்காலத்தில் புதிய புதிய கோவில்களைக் கட்டியும், பழைய கோவில்களை மிகுந்த பொருட்செலவில் புனரமைத்தும் காத்து இந்து தர்மத்தையும் காக்கின்றனர். இந்த சிறப்புகளுக்கு எல்லாம் காரணம் எங்களை நல்வழிப்படுத்தும் எங்கள் ஊர் பெரியவர்களும், அதை கட்டுக்கோப்பாகப் பின்பற்றும் என்னைப் போன்ற இளைஞர்களுமே ஆவர்.